MEDIA STATEMENT

கணவர் கடனைச் செலுத்தாததால் மனைவி கடத்தல்- 10 நாட்களுக்குப் பின்னர் காவல் துறையால் மீட்பு

22 செப்டெம்பர் 2023, 8:50 AM
கணவர் கடனைச் செலுத்தாததால் மனைவி கடத்தல்- 10 நாட்களுக்குப் பின்னர் காவல் துறையால் மீட்பு

ஜோர்ஜ் டவுன், செப் 22- கணவர் கடனைத் திரும்பச் செலுத்தாததால் கும்பல் ஒன்று அவரின் மனைவியைக் கடத்தி பத்து நாட்களுக்கு அடைத்து வைத்திருந்ததோடு அவரை ஊசியால் குத்தியும் சிகிரெட்டினால் சுட்டும் சித்திரவதை செய்துள்ளது.

இந்தோனேசியரான அந்த ஆடவரிடமிருந்து 540,000 வெள்ளியைப் திரும்பப் பெறும் நோக்கில் இந்தோனேசியாவின் மேடானை பூர்வீகமாகக் கொண்ட அவரின் மனைவியை  கடத்திய அக்கும்பல் பினாங்கு உள்பட பல்வேறு இடங்களில் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.‘

குத்தகையாளரான அந்த இந்தோனேசிய ஆடவர் வர்த்தகம் தொடர்பில் உள்நாட்டு ஆடவரிடம் பெற்றிருந்த கடனைத் திரும்பச் செலுத்தாத நிலையில் கடந்த 7ஆம் தேதி தன் மூன்று தோழிகளுடன் இங்குள்ள பாயா தெருபோங்கில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த அவரின் மனைவியை மூவர் கொண்ட கும்பல் கடத்தியதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ் கோக் சின் கூறினார்.

எனினும், அந்த பெண்ணின் தோழிகளை விடுவித்த அந்த கும்பல், அப்பெண்ணை பட்டர்வெர்த்திற்கு கொண்டுச் சென்று அடைத்து வைத்தது. இந்த கும்பலின் பிரதான மூளையாகச் செயல்பட்ட நபர் இந்தோனேசியாவில் இருந்த அப்பெண்ணின் கணவரிடம் பிணைத் தொகை கோரியுள்ளார் என்று அவர் சொன்னார்.

அதிகாரிகள் பிடியில் சிக்கிவிடாமலிருப்பதற்காக அக்கும்பல் அப்பெண்ணின் இருப்பிடத்தை பல இடங்களுக்கு மாற்றி  வந்துள்ளது. மனைவியைக் காப்பாற்றுவதற்காக 47 வயதான அப்பெண்ணின் கணவர் நாணய மாற்று முகவர் மூலம் 50,750 வெள்ளியை அக்கும்பலுக்கு அனுப்பியுள்ளார்.

எனினும், அப்பெண்ணை விடுவிக்க மறுத்த அக்கும்பல் மேலு 540,000 வெள்ளியை தர வேண்டும் என அச்சுறுத்தியுள்ளது. தனது மனைவியின் பாதுகாப்பு கருதி அந்த நபர் உடனடியாக மலேசியா வந்துள்ளார் என டத்தோ காவ் இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் சிலாங்கூர் மாநிலத்தின்  கின்ராரா போலீஸ் நிலையத்தில் இம்மாதம் 15ஆம் தேதி அந்த ஆடவர் புகார் செய்ததைத் தொடர்ந்து அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்காக ஓப் ஸ்கோர்ப்பியோன் எனும் நடவடிக்கையை போலீசார் தொடக்கினர் என்றார் அவர்.

இம்மாதம் 17ஆம் தேதி அதிகாலை 5.15 மணியளவில் ஷா ஆலமில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்ட போலீசார் அப்பெண்ணை பத்திரமாக மீட்டனர் என கூறிய அவர், அப்பெண் பட்டர்வெர்த்தில் மூன்று நாட்களும் பூச்சோங்கில் நான்கு நாட்களும் ஷா ஆலமில் மூன்று நாட்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.