ஈப்போ, செப் 19- சமூக ஊடங்கள் வாயிலாக அறிமுகமான நபரை நம்பி
ஓ.எஸ்.எல். எனும் செயலி வாயிலாக இல்லாத முதலீட்டுத் திட்டத்தில்
பங்கு கொண்ட நிறுவன இயக்குநர் ஒருவர் தனது சேமிப்பான 348,673
வெள்ளியை இழந்தார்.
தாம் செய்த முதலீடு எந்த வருமானத்தையும் ஈட்டித் தராததை அறிந்த
அந்த 58 வயது இயக்குநர் இது குறித்து போலீசில் புகார் செய்ததாக பேராக்
மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யுஸ்ரி ஹசான் பாஸ்ரி
கூறினார்.
பெண்மணி ஒருவருடன் சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு கடந்த ஜூலை
27ஆம் தேதி இணையம் வாயிலாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஒ.எஸ்.எல்.
எனும் செயலி வாயிலாக முதலீடு செய்யும்படி அந்தப் பெண் அவரைக்
கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த நபரும் கடந்த ஆகஸ்டு 12 முதல் 26 வரை மொத்தம் 348,675
வெள்ளியை எட்டு முறை எழு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில்
சேர்ந்துள்ளார்.
சில தினங்களுக்குப் பின்னர் அந்த நபரின் ஓ.எஸ்.எல். முதலீட்டுக்
கணக்கில் 10 லட்சத்து 6 ஆயிரத்து 85 வெள்ளி சேர்ந்துள்ளது என முகமது
யுஸ்ரி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
எனினும், அந்த தொகையை மீட்க முயன்ற போது, லாபத்தில் 30
விழுக்காடு தமக்குத் தரப்பட வேண்டும் என அந்த சந்தேகப்பேர்வழி
வற்புறுத்தியதாக அவர் மேலும் சொன்னார்.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 420வது
பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறும் இணைய
முதலீட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம் எனப் பொது
மக்களைக் கேட்டுக் கொண்ட அவர், இதன் தொடர்பில் பேங்க் நெகாரா
அல்லது பங்குச் சந்தை ஆணையத்தின் சிறப்பு செயலிகள் வாயிலாக
விபரங்களைப் பெறுமாறு வலியுறுத்தினார்.








