கூலாய், செப் 18 - தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகம் (கேகேடி) சபா மற்றும் சரவாக்கில், குறிப்பாக கிராமப்புறங்களில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சாதனங்களை நிறுவும் திட்டத்தை விரிவு படுத்தும் என்று அதன் துணை அமைச்சர் தியோ நீ சின் கூறினார்.
இந்த மாதம் சரவாக்கில் உள்ள பாவ் மற்றும் ஜூலாவில் இரண்டு சாதனங்கள் நிறுவப்பட்டன. மேலும், ஜொகூர், பேராக், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களிலும் ஸ்டார்லிங்க் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
"அதில் மீதமுள்ள மூன்று செயற்கைக்கோள் சாதனங்களைச் சபாவில் நிறுவ திட்டமிட்டுள்ளோம், மேலும் அவைகளை நிறுவுவதற்கான இடங்களை அடையாளம் கண்டு வருகிறோம்," என்று தியோ இன்று பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
சபா மற்றும் சரவாக்கில் அச்சாதனங்களை நிறுவுவது தற்காலிக தீர்வாகும், ஏனெனில் உட்புற பகுதிகளில், குறிப்பாக ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மற்றும் பிற கேபிள்களை நிறுவுவது கடினமாக உள்ளது.
அச்சாதனத்தை நிறுவுவதற்கான செலவுகள் மற்றும் ஒரு வருடத்திற்கான மாதாந்திர கொடுப்பனவுகளை மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் ஏற்கும் என்று கூலாய் எம்.பி கூறினார்.
தற்போது, ஹை-ஸ்பெக் ஸ்டார்லிங்க் சாதனத்தின் ஒரு யூனிட் RM11,613 செலவாகும், இதன் கவரேஜ் தூரம் சுமார் 100 மீட்டர் மற்றும் வேகம் 40MBPS முதல் 220MBPS வரை இருக்கும்.
- பெர்னாமா








