நானிங், செப் 18 - மலேசியா - சீனா
அரசதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு
நிறைவையொட்டி அடுத்தாண்டு
மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம்
மேற்கொள்ளும்படி சீன அதிபர் ஜி ஜின் பிங்
மற்றும் பிரதமர் லீ கியாங் ஆகியோருக்கு
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
தூதரக உறவுகளின் பொன் விழாவை
முன்னிட்டு மலேசியாவும் சீனாவும்
அடுத்தாண்டில் பல்வேறு நிகழ்வுகளுக்குத்
திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சருமான
அன்வார் தெரிவித்தார்.
இந்த ஆண்டு மலேசியாவிற்கும் சீனாவிற்கும்
இடையிலான விரிவான பங்காளித்துவத்தின்
10 வது ஆண்டு நிறைவாகும். கடந்த 2023
ஆம் ஆண்டில் மலேசியாவிலிருந்து
சீனாவிற்கு 12 உயர்மட்ட நிலையிலான
பரிமாற்ற வருகைகளும் சீனாவிலிருந்து
மலேசியாவிற்கு ஆறு பரிமாற்ற வருகைகளும்
நடைபெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு நான் இரண்டு முறை
சீனாவுக்கு வருகை மேற்கொண்டுள்ளேன்
என்று 20வது சீனா-ஆசியான்
கண்காட்சிக்கான தனது வருகையை
முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில்
அன்வார் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமராக
நியமிக்கப்பட்ட பிறகு இவ்வாண்டு மார்ச்
மாதம் முதல் முறையாக சீனாவுக்குச் சென்ற
பிரதமர் அன்வார், பெய்ஜிங் மற்றும்
ஹைனானுக்கு பணி நிமித்தப் பயணத்தை
மேற்கொண்டார்.
மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான
உறவுகள் பரஸ்பர மற்றும் சமத்துவத்தின்
அடிப்படையில் அமைந்திருப்பதால் அவை
தனித்துவமும் வரலாற்றுச் சிறப்பும்
வாய்ந்தவையாக விளங்குகின்றன என்று
பிரதமர் விவரித்தார்.
சீனாவுக்கான வருகை மற்றும் பிரதமர்
லீயுடனான தனது கலந்துரையாடல் குறித்து
கருத்து தெரிவித்த அவர், பரஸ்பர
முக்கியத்துவம் வாய்ந்த
இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச
பிரச்சனைகளை குறித்து தாங்கள்
விவாதித்ததாகச் சொன்னார்.








