ஷா ஆலம், ஆக 27 - சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.) தனது ஆறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் மாநிலம் முழுவதும் 5,000 வீடுகளை கட்டுவதற்கான இலக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் அடைய நம்பிக்கை கொண்டுள்ளது.
ஷா ஆலம் செக்சன் 16இல் உள்ள ரெசிடென்சி அட்வெனா மற்றும் ரவாங், கோத்தா புத்ரியில் உள்ள புத்ரி அரியானா உள்ளிட்ட பல திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் துணை தலைமை நிர்வாக அதிகாரி (மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர்) சுஹைமி கஸ்டோன் தெரிவித்தார்.
பி கே.என்.எஸ். நிறுவனத்தால் தொடங்கப்பட்ட இரட்டை அடுக்கு மாடி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு இறைவன் அருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
விற்பனையைப் பொறுத்தவரை, அதன் திட்டத்தைப் பொறுத்தே முடிவு செய்ய முடியும். உதாரணமாக, புத்ரி ஹரியானாவில் உள்ள 72 வீடுகளில் 70 சதவீதம் இதுவரை விற்பனையாகியுள்ளது என்று அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள பி.கே.என் எஸ். காம்ப்ளக்சில் 2023 ஆம் ஆண்டிற்கான வீடு வாங்குபவர் 2 திட்டத்தை அறிமுகப்படுத்திய நிகழ்வில் உரையாற்றும் போது சுஹைமி இவ்வாறு குறிப்பிட்டார்.
உலு சிலாங்கூர், செரெண்டாவில் உள்ள அந்தாரா காபியில் வீடமைப்புத் திட்டம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை உள்ளடக்கிய பல்வேறு
வீடமைப்புத் திட்டங்கள் ஷா ஆலம், கோத்தா புத்ரி, கோல சிலாங்கூர், அந்தாரா காபி மற்றும் சிலாங்கூர் சைபர் வேலி உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆறு புதிய சொத்து மேம்பாட்டுத் திட்டங்கள் வாயிலாக 100 கோடி வெள்ளி மொத்த வளர்ச்சி மதிப்பீட்டைப் பெற பி.கே.என்.எஸ். இலக்கு கொண்டிருப்பதாக முன்னதாக கூறப்பட்டது.



