ஷா ஆலம், ஆக 24- தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் திறந்த டோல் கட்டண முறையை (ஓ.பி.எஸ்.) பயன்படுத்துவதற்கு ஏதுவாக தங்கள் டெபிட், விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளில் உள்ள தொடர்பற்ற கட்டண முறையை இயக்க நிலையில் வைக்க பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த ஓ.பி.எஸ். டோல் கட்டண முறையை தற்போது எல்.டி.பி. எனப்படும் பூச்சோங்-டாமன் சாரா நெடுஞ்சாலை மற்று ஸ்ப்ரிண்ட் நெடுஞ்சாலை ஆகியவற்றில் பயன்படுத்த முடியும் என்று அந்த நெடுஞ்சாலைகளின் ஒப்பந்த நிறுவனமான லைட்ரெக் பெர்ஹாட் கூறியது.
அதே போல் ஷா ஆலம் விரைவுச்சாலை (கெசாஸ்) மற்றும் ஸ்மார்ட் சுரங்கப் பாதையிலும் வாகனமோட்டிகள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்களைப் பயன்படுத்தி டோல் கட்டணம் செலுத்தலாம்.
வழக்கமான டோல் கட்டண முறைகளான டச் அண்ட் கோ, ஸ்மார்ட் டெக் மற்றும் ஆர்.எப்.ஐ.டி.க்குப் பதிலாக ஓ.பி.எஸ். முறையைப் பயன்படுத்தும் நோக்கில் கெசாஸ் மற்றும் ஸ்மார்ட் நெடுஞ்சாலைகளில் இத்திட்டம் பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
இக்காலக்கட்டத்தில் திறக்கப்பட்டிருக்கும் பரீட்சார்த்த முறையிலான டோல் கட்டண தடங்கள் வாகன மோட்டிகளுக்கு சமிக்ஞையை வழங்கும். தங்கள் கார்டுகளைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளும்படி வாகனமோட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.








