கோலாலம்பூர், ஆக 24- பகாங் மாநிலத்தின் பெலாங்கை சட்டமன்றத்
தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பதற்காக தேர்தல்
ஆணையம் (எஸ்.பி.ஆர்.) இன்று கூடுகிறது.
புத்ரா ஜெயாவிலுள்ள மெனாரா எஸ்.பி.ஆர். கட்டிடத்தில் நடைபெறவுள்ள
இந்த சிறப்புக் கூட்டத்திற்கு எஸ்.பி.ஆர். தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி
சாலே தலைமை தாங்குகிறார்.
பெலாங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ ஜோஹாரி
ஹருண் இம்மாதம் 17ஆம் தேதி நிகழ்ந்த விமான விபத்தில்
பலியானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சிறப்புக் கூட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் மற்றும் வாக்களிப்பு தேதி,
தேர்தலில் பயன்படுத்தப்படவிருக்கும் வாக்காளர் பட்டியல் மற்றும் இதர
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். இக்கூட்டத்திற்குப் பின்னர்
செய்தியாளர் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெலாங்கை தொகுதி எதிர்பாராத வகையில் காலியானது தொடர்பல் பகாங்
மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோஸ்ரீ முகமது சர்கார்
சம்சுடினிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவலைத் தாங்கள் பெற்றுள்ளதாக
எஸ்.பி.ஆர். கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தது.
கடந்த வாரம் வியாழக்கிழமை ஷா ஆலம் பண்டார் எல்மினாவில்
நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில் பலியான பத்து பேரில் டத்தோஸ்ரீ
ஜோஹாரியும் ஒருவராவார். 53 வயதான ஜோஹாரி பகாங் மாநில
ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் தேசிய
முன்னணி வேட்பாளரான ஜோஹாரி 4,048 வாக்குகள் பெரும்பான்மையில்
அத்தொகுதியில் வெற்றி பெற்றார்.








