கோலாலம்பூர், ஆக 24- நடப்பிலுள்ள ஒருங்கிணைந்த இரு தரப்பு
உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் தங்களுக்குள்ள கடப்பாட்டை
மலேசியாவும் ஈரானும் மறுவுறுதிப்படுத்தியுள்ளன.
பொருளாதாரம், கல்வி, உணவு பாதுகாப்பு, அறிவியல் மற்றும்
தொழில்நுட்பம் ஆகியவற்றோடு சாத்தியக்கூறுகள் உள்ள இதரத்
துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் இணக்கம்
கண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர் ஈரானிய
அதிபர் சையட் எப்ராஹிம் ராய்ஸியுடன் மரியாதை நிமித்தச் சந்திப்பை
நடத்தியப் பின்னர் அதிபருடன் நேற்று தாம் நடத்திய தொலைபேசி
உரையாடலின் போது இந்த கடப்பாட்டை ஈரான் உறுதிப்படுத்தியதாக
அவர் சொன்னார்.
இந்த உரையாடலின் போது கூட்டு ஆணையம் மற்றும் கூட்டு
பொருளாதார ஆணையம் ஆகிய இரு கூட்டுக் குழுக்களை அமைப்பதற்கும்
இணக்கம் கண்டோம். இவ்விரு குழுக்களும் விரைவில் சந்திப்பை நடத்தி
இரு நாடுகளுக்கும் பயன் தரக்கூடிய துறைகளில் ஒத்துழைப்பை
வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கும் என்றார் அவர்.
இதனிடையே, ஈரானிய அதிபருடன் தாம் நடத்திய மரியாதை நிமித்தச்
சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு
ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை அதிபர் சையட் வரவேற்றதாக
வெளிறவு அமைச்சர் ஜம்ரி கூறினார்.
ஈரானுக்கு மேற்கொண்ட நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின்
இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.








