கோலாலம்பூர், ஆக 16- முக்கிய பொருளாதாரத் துறைகளில் வியூக
முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவதற்காக முன்னணி முதலீட்டாளர்கள்
சிலருடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று புத்ரா
ஜெயாவில் சந்திப்பு நடத்தினார்.
பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலை ஏற்படுத்துவதற்கும் மடாணி
பொருளாதார இலக்கை அடைவதற்கும் ஏதுவாக இந்த முயற்சி
முன்னெடுக்கப்படுவதாக அன்வார் கூறினார்.
தேசியப் பொருளாதார ஒழுங்கைச் செயல்படுத்துவதற்கும் அனைத்து
மலேசியர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்குமான விரிவான மற்றும்
தெளிவான செயல் திட்டமாக மடாணி பொருளாதாரக் கொள்கை
விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியை உந்தச் செய்வதில் தனியார் மற்றும்
முதலீட்டாளர்கள் பங்கேற்பதன் முக்கியத்துவதைத் இந்த தொலைநோக்கு
திட்டம் வலியுறுத்துகிறது. இதன் மூலம் புத்தாக்க நடவடிக்கைகள்
ஊக்குவிக்கப்படுவதோடு உயர் தரத்திலான மற்றும் அதிக தாக்கம்
கொண்ட வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்று அவர் மேலும்
சொன்னார்.
பொருளாதார மேம்பாட்டிற்கும் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும்
பெரும் பங்களிப்பை வழங்கிய மற்றும் அனைத்துலக நிலையில்
செல்வாக்கை கொண்ட முதலீட்டாளர்கள் சிலர் இந்த சந்திப்பில் கலந்து
கொண்டதாக அன்வார் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் பேஸ்புக் இணை நிறுவனர்
எடுவார்டோ செவரின், பி கேப்பிட்டல் இணை தலைமைச் செயல்முறை
அதிகாரி ராஜ் கங்குலி, டபள்யு.எம். பார்ட்னர்ஸ் நிறுவன நிறுவனர்
அலேஜாண்ட்ரோ வேன்ஸ்டன், ஐரோப்பியன் வென்சர்ஸ் ஃபண்ட்ஸ் நிறுவனர் பீட்டர் கடாஸ் ஆகியோரும் அடங்குவர் என அவர் குறிப்பிட்டார்.








