மலாக்கா, ஆக 16 - மலேசியா-
இந்தோனேசியா எல்லைக்கு அருகே படகு
கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்துக்
கொண்டிருந்த ஒரு பெண் உட்பட 11
இந்தோனேசியர்கள் மதியம் 12.00
மணியளவில் அந்த வழியாகச் சென்ற
படகினால் மீட்கப்பட்டனர்.
இருபத்து நான்கு முதல் 51 வயதுக்குட்பட்ட
அனைத்து பாதிக்கப்பட்டவர்களும்
இண்டோமல் கிங்டம் என்ற படகு சேவை
நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களால்
மீட்கப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்டக்
காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.
இந்தோனேசியாவின் டுமாயில் இருந்து
மலாக்கா குடிநுழைவு, சுங்க,
தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகப்
படகுத் துறைக்குச் செல்லும் போது
படகொன்று கவிழ்ந்து அதன் பயணிகள் நீரில்
தத்தளிப்பதை கப்பலின் 39 வயதான கேப்டன்
கணடதாக அவர் சொன்னார்.
இந்தோனேசியாவின் கடல் எல்லைப்
பகுதியை அடைந்தபோது
பாதிக்கப்பட்டவர்களைக் கேப்டன்
கண்டார். உடனே தனது குழுவினருடன்
சேர்ந்து அவர்களைக் காப்பாற்றினார்.
பின்னர் அவர்கள் மலாக்கா குடிவரவு, சுங்க,
தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாக
படகுத் துறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
என்று கிறிஸ்டோபர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
26 வயதான ஒரு பெண் ஒருவர் கிட்டத்தட்ட
நீரில் மூழ்கியதால் சுவாசிப்பதில்
சிரமப்பட்டதாகவும் பின்னர் சிகிச்சைக்காக
மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட
அவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும்
அவர் தெரிவித்தார்.
மற்ற 10 ஆண்களின் உடல் திலை சீராக
இருந்த போதிலும் அவர்கள்
மருத்துவமனையில் பரிசோதனைக்கு
உட்படுத்தப்பட்டு பின்னர் மேல்
நடவடிக்கைக்காகக் குடிநுழைவுத் துறையிடம்
ஒப்படைக்கப்படுவார்கள் என்று அவர்
கூறினார்.








