கிள்ளான், ஆக 14- இம் மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் லெம்பா
ஜெயா தொகுதியில் தமக்கு வாக்களித்து வெற்றி அடையச் செய்த தொகுதி
மக்களுக்கு நாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அல்டிமேட் கூறினார்.
தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையாகப் பாடுபட்ட பக்கத்தான்
ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் தேர்தல் பணியாளர்களுக்கு
தாம் நன்றியை புல படுத்திக் கொள்வதாக சைட் அகமது சைட் அப்துல்லா
ரஹ்மான் அல்ஹாடாட் எனும் இயற் பெயர் கொண்டவரான அவர்
சொன்னார்.
லெம்பா ஜெயாவின் ஒரு பகுதியாக ஆனதில் நான் பெருமிதம்
கொள்கிறேன். அதே சமயம் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு ரிய
உத்வேகத்தை அளித்த வாக்காளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
தயாள குணம் கொண்ட லெம்பா ஜெயா வாக்காளர்களுக்கு ஒற்றுமை
அரசு உரிய முறையில் பிரதியுபகாரம் செய்யும் என நான் நம்புகிறேன்
என்று பிரபல ராப் பாடகருமான அவர் தெரிவித்தார்.
கட்சி வேறுபாடின்றி லெம்பா ஜெயா மக்கள் அனைவருக்கும் தாம் முடிந்த
வரை சிறப்பான சேவையை வழங்க உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.
பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வருவோரை சந்திப்பதன் மூலம் இன்றே
எனது பணியைத் தொடக்கவுள்ளேன் என்றும் அவர் சொன்னார்.
இந்த தேர்தலில் 6,707 வாக்குகள் பெரும்பான்மையில் அல்டிமேட் லெம்பா
ஜெயா தொகுதியில் வெற்றி பெற்றார். அவருக்கு 26,116 வாக்குகள்
கிடைத்த வேளையில் பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த ஷரிபா
ஹஸ்லிசா சைட் அரிபினுக்கு 19,409 வாக்குகள் கிடைத்தன.







