ஷா ஆலம், ஆக 14- நேற்று முன்தினம் நடந்த மாநிலத் தேர்தலில் மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கிய மக்களுக்கு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டதோடு மேலும் கடினமாக உழைக்கவும் தீர்மானித்துள்ளனர்.
தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் தொகுதியின் மேம்பாட்டை தொடர்ந்து உறுதி செய்து வரப்போவதாக பாண்டன் இண்டா சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஹாஷிம் கூறினார்.

இந்த தேர்தலில் நான் போட்டியை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை. முந்தைய ஐந்து ஆண்டுகளில் ஆற்றிய சேவைகளை மட்டுமே நம்பிருந்தேன். நல்ல பிரச்சார உத்தி மற்றும் ஒற்றுமை அரசின் ஆதரவுடன் பாண்டான் இண்டா மக்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்குரிய வாய்ப்பினைப் பெற்றேன் என்று அவர் சொன்னார்.
இது ஒரு பெரிய சாதனை. இதனை வழங்கிய வாக்காளர்களுக்கு நன்றி. கொடுக்கப்பட்ட ஆணையை நான் வீணாக்க மாட்டேன். முன்பை விட சிறப்பாக எனது கடமைகளைச் செய்வேன் என்று சிலாங்கூர் கினி தொடர்பு கொண்ட போது அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்த வெற்றி குறித்து கருத்துரைத்த கின்ராரா தொகுதி உறுப்பினர் இங் ஸீ ஹான், பாகுபாடு இல்லாமல் அனைத்து குடியிருப்பாளர்களின் நலனுக்காகவும் வழக்கம் போல் பணியைத் தொடருவேன் என்றார்.
இந்த தேர்தலில் நான் மலேசியாவிலே அதிகப் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றேன். என்னைப் பொறுத்தவரை, அதிக பெரும்பான்மை பெறுவது என்பது மக்களின் நலனைப் பாதுகாப்பதில் அதிக பொறுப்பு உள்ளதை புலப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நான் சிறப்பான சேவையை வழங்குவேன், மேலும் கின்ராரா தொகுதியைத் தொடர்ந்து மேம்படுத்துவேன். இந்த வெற்றி எங்களின் புதிய நண்பர்களான அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் ஆகியவற்றுடன் ஒற்றுமையாக இருந்ததன் விளைவாகும் என்று அவர் கூறினார்.
இதனிடையே, தேர்தல் முடிவு குறித்து கருத்துரைத்த சுங்கை ஆயர் தாவார் உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில், இந்த வெற்றி தனக்காக அல்ல என்றும் மாறாக அப்பகுதி மக்களுக்கு கிடைத்த பரிசு என்றும் விவரித்தார்.

அபிவிருத்தி மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் முன்பை விட செயல்திறனை மேம்படுத்த நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் அவர்.
பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் ஆகிய கூட்டணிகள் அடங்கிய ஒற்றுமை அரசாங்கம் 56 இடங்களில் 34 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் சிஷாங்கூரில் ஆட்சி அமைத்தது.



