கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 - வெளிநாட்டில் பணிபுரியும் மலேசியர்கள் கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், திரங்கானு மற்றும் கிளந்தான் மாநிலங்களில் நாளை நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க தாயகம் வர ஆர்வத்துடன் உள்ளனர்.
சிங்கப்பூரில் ஒரு துணைக் காவல்துறை அதிகாரியாக பணிபுரியும் எல். தேவீஸ்வரன் (24), நாட்டின் மீது அவருக்கு இருந்த ஆழ்ந்த அன்பு, பாகன் ஜெர்மாலில் வாக்களிக்க பினாங்குக்கு திரும்பிச் செல்லத் தூண்டியது என்றார். "வாக்களிப்பது ஒரு குடிமகனாக எனது பொறுப்பு" என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
கெடாவில் உள்ள குபாங் தொகுதியில் வாக்களித்து ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக திங்களன்று வீடு திரும்பியதாக 29 வயதான முகமட் சைதுன் முகமட் ஃபுஸி கூறினார்.
“RM4,000 முதல் RM5,000 வரையிலான பயணச் சீட்டு இருந்தபோதிலும், நான் ஒரு குடிமகனாக எனது கடமைக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்கத் திரும்பினேன். இந்த காலகட்டத்தில் தன்னுடைய கடமையை நிறைவேற்ற வீட்டிற்கு வந்து, குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் இணையும் வாய்ப்பைப் பெற்றேன்.
"அஞ்சலில் வாக்களிப்பதைக் காட்டிலும் நேரடியாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கும் சூழல் உண்மையில் கலகலப்பானது. வாக்குச் சாவடியில் நீண்ட வரிசையின் போது நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என்று கத்தாரில் பணிபுரியும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் கூறினார்.
ஆறு மாதங்கள் மட்டுமே வெளிநாட்டில் பணிபுரிந்த போதிலும், வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று ஷிக் ஹைருல் நிஜாம் ஷிக் நோர் கூறினார்.
"நான் பணிபுரியும் நிறுவனம் வாக்களிக்க திரும்புவதற்கு எனக்கு அனுமதியை வழங்கியது. நெகிரி செம்பிலானில் உள்ள தேமியாங் தொகுதியில் வாக்களிக்க வீட்டுக்குச் செல்வேன்,'' என்றார்.
நாளை சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானுவில் மாநிலத் தேர்தல்கள் மற்றும் கோலா திரங்கானுவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
- பெர்னாமா








