சைபர் ஜெயா, ஆக 11- நாளை நடைபெறவிருக்கும் ஆறு மாநில
தேர்தல்கள் மற்றும் கோலத் திரங்கானு நாடாளுமன்றத் இடைத் தேர்தலில்
வாக்களிப்போர் எண்ணிக்கை 85 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கும்
என தேர்தல் ஆணையம் (எஸ்.பி.ஆர்.) மதிப்பிடுகிறது.
இந்த எண்ணிக்கை சாத்தியமானால் கடந்தாண்டு நவம்பர் மாதம்
நடைபெற்ற நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் பதிவான 74.7 விழுக்காட்டு
வாக்குகளை விட இது அதிகமாக இருக்கும் என்று தேர்தல்
ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே கூறினார்.
நாட்டின் நலன் கருதி மறவாமல் வாக்களிக்கும்படி பொதுமக்களை
கேட்டுக் கொண்ட அவர், எஸ்.பி.ஆர். பணியாளர்கள் தவிர்த்து அறிமுகம்
இல்லாத யாரிடமும் அடையாளக் கார்டை ஒருபோதும் கொடுத்து விட
வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
தேர்தலின் போது ஏற்படக்கூடிய பிரச்சனைகளைக் கையாள்வதற்கு
நாங்கள் பாதுகாப்புப் படையினருடன் தயாராக உள்ளோம். தேர்தல்
தொடர்புடைய பிரச்சனைகளைக் கையாள்வது தொடர்பில் அதிகாரிகளிடம்
நான் விவாதித்துள்ளேன். ஆகவே, எந்த அச்சமும் இன்றி நாளை வழக்கம்
போல் பொது மக்கள் தைரியமாக வாக்களிக்கலாம் என அவர்
தெரிவித்தார்.
இங்குள்ள சைபர் ஜெயா செமராக் மண்டபத்தில் உள்ள வாக்கு பெட்டிகளை
சரிபார்க்கும் மையத்தில் நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான், திரங்கானு
ஆகிய ஆறு மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கோல
திரங்கானு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நாளை இடைத் தேர்தல்
நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குச் சாவடிகளில் நெரிசலைக் குறைப்பதற்கு ஏதுவாக தேர்தல்
ஆணையம் வாக்களிப்பதற்கான சரியான நேரத்தை பரிந்துரைத்துள்ளதாகக்
கூறிய அவர், வாக்களிப்பு மையம் காலை 8.00 மணி முதல் மாலை 6.00
மணி வரை திறந்திருக்கும் என்பதால் வாக்காளர்கள் காலையிலே
வாக்குச்சாவடிகளில் திரள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.








