ஷா ஆலம், ஆக 11- பெர்சத்து கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதித்
தலைவர் அக்கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இந்த
அறிவிப்பை அவர், நேற்றிரவு நடைபெற்ற பக்கத்தான் ஹராப்பான் பிரசார
மேடையில் பகிரங்கமாக அறிவித்தார்.
நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் பத்தாங் காலி தொகுதியில்
பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடும் டத்தோ முகமது ஈசா அபு
காசிமுக்கு முழு ஆதரவை வழங்குவதாக முகமது அனுவார் நோர்
அறிவித்துள்ளதாக மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று மாலை 4.00 மணிக்கு நான் பதவி விலகினேன். எனக்கு
இழைக்கப்பட்ட நியாயமற்ற மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத
செயல்களால் நீண்ட யோசனைக்குப் பின்னர் இந்த முடிவை
எடுத்துள்ளேன் என்று அவர் சொன்னார்.
குறிப்பிட்ட சில அணியினர் என்னை பகடைக் காயாக ஆக்கி விட்டனர்.
இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ முகமது
அஸ்மின் அலியின் அணியைச் சேர்ந்த முகமது முஹைமின் ஹரித்
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலு சிலாங்கூர் பெர்சத்து
தொகுதியில் குழப்பம் ஏற்படத் தொடங்கியது.
வேட்பாளர் அறிவிப்பை ஆட்சேபிக்கும் வகையில் பெரிக்கத்தான்
நேஷனல் கொடி எரிக்கப்பட்டதோடு அதன் காரணமாக உலு சிலாங்கூர்
பெர்சத்து உறுப்பினர்கள் மூவர்கட்சியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு
இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
வேட்பாளர் தேர்வு ஒரு தலைப்பட்சமாகவும் குறிப்பிட்ட அணியினருக்கு
சார்பாகவும் உள்ளதாக கூறி பெர்சத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டாக்டர் முகமது பாய்ஸ் நா‘அமான் இம்மாதம் 7ஆம் தேதி பதவி விலகினார்.








