கோலாலம்பூர், ஆக 11 - ஆறு மாநிலங்களில் ஜூலை 29 முதல் ஆகஸ்டு 9 வரை தேர்தல்கள் தொடர்பான 1,524 புகார்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.
சிலாங்கூரில் 629 புகார்கள் பெறப்பட்ட வேளையில் அதற்கு அடுத்த நிலையில்
திரங்கானு (289), கெடா (249), கிளந்தான் (213), நெகிரி செம்பிலான் (111) மற்றும்
பினாங்கு (33) ஆகிய மாநிலங்கள் உள்ளதாகத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடீன் ஹுசேன் தெரிவித்தார்.
இப்புகார்கள் தொடர்பில் சிலாங்கூரில் 26, கெடாவில் 23, பினாங்கில் 16, திரங்கானுவில் 15, நெகிரி செம்பிலானில் 14, கிளந்தானில் 9 என மொத்தம் 103 விசாரணை அறிக்கைகள்
திறக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் சொன்னார்.
அரச மலேசிய போலீஸ் படையின் ஓப் சந்தாஸ் நடவடிக்கையின் கீழ் நான்கு
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் உள்ளூர்வாசிகள் என்று அவர் நேற்று புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
அந்த நால்வரில் இருவர் மீது குற்றவியல் சட்டத்தின் 435வது பிரிவின் கீழும்
மேலும் இரண்டு பேர் மீது அதே சட்டத்தின் பிரிவு 325 மற்றும் பிரிவு 427
இன் கீழும் விசாரணை நடத்தப்படுகின்றன என்றார் அவர்.
சமூக ஊடகங்களில் அவதூறான அல்லது நிந்தனைக்குரிய அறிக்கைகள்
வெளியிட்டது சம்பந்தமாக 13 விசாரணை அறிக்கைகளும் திறக்கப்பட்டுள்ளன என்று ரஸாருடின் கூறினார்.
இம்மாதம் 12 ஆம் தேதி தேர்தல்கள் நடைபெறவுள்ள ஆறு மாநில போலீஸ்
தலைமையகங்களில் 373 புலனாய்வு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.








