கிள்ளான், ஜூன் 9- வரும் சனிக்கிழமை நடைபெறும் தேர்தலில் தாம் மீண்டும் வெற்றி பெற்றால் தமது தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை தொடரவிருப்பதாக சுங்கை காண்டீஸ் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் மற்றும் மத்திய அரசில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பல முன்னெடுப்புகள் தடைபட்டதால் கடந்த ஐந்தாண்டு கால தவணைக் காலத்தில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்த முடியாமல் போனதாக அவர் சொன்னார்.
ஜாலான் பத்து லீமா முதல் ஜாலான் கெபுன் வரையிலான இரண்டாம் கட்ட வெள்ளத் தடுப்புத் திட்டத்தை உதாராணம் காட்டிய அவர், இந்த திட்டத்திற்கு தற்போதுதான் அனுமதி பெறப்பட்டு அடுத்த மாதம் பணிகள் தொடங்கப்படவுள்ளன என்றார்.
அதே போல் கம்போங் லொம்போங்கில் பள்ளிவாசல் நிர்மாணிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட போதிலும் குத்தகையாளர் இன்னும் நியமிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
பொது மக்களின் வசதிக்காக சுங்கை காண்டீஸ் தொகுதியில் முழுமையான மேம்பாட்டிற்கான அவசியம் குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் ஜவாவி குறிப்பிட்டார்.
பாரம்பரிய கிராமங்களில் சாலை,வடிகால், சாலை விளக்கு போன்ற அடிப்படை வசதிகளோடு பள்ளிகள் மற்றும் பள்ளிவாசல்களை அமைப்பதற்கான விண்ணப்பங்களும் அதிகரித்து வருகின்றன என்று அவர் சொன்னார்.
வெள்ளம் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதில் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். ஜோஹான் செத்தியா, ஜாலான் கெபுன், புக்கிட் நாகா போன்ற இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. காரணம் வெள்ளம் காரணமாக பொது மக்களுக்கு அதிக பாதிப்பும் இழப்பும் ஏற்படுகிறது என்றார் அவர்.
தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் தாம் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகமான மக்களைச் சந்தித்து வாக்கு வேட்டை நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.



