ஷா ஆலம், ஆக 8- மாநிலத் தேர்தல் நெருங்கும் காரணத்தால்
சர்ச்சைக்குரிய பெட்டாலிங் ஜெயா டிஸ்பெர்சல் லிங்க் எக்ஸ்பிரஸ்வே
(பிஜேடி லிங்க்) எனும் போக்குவரத்து பரவல் விரைவுச் சாலைத் திட்டம்
ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுவதை மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி மறுத்துள்ளார்.
அந்த நெடுஞ்சாலை மேம்பாட்டாளரின் விளைவு மதிப்பீட்டு அறிக்கையின்
விபரங்கள் கடந்த மாதம்தான் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின்
கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட வேளையில் அவற்றில் பல பகுதிகள்
மாநில அரசின் நிபந்தனைகளை நிறைவு செய்யத் தவறி விட்டன என்று
அவர் தெரிவித்தார்.
அந்த அறிக்கை ஒரு மாதத்திற்கு முன்னர்தான் நகர மற்றும் திட்டமிடல்
பிரிவிடம் ( பிளான் மலேசியா) சமர்பிக்கப்பட்டது என்று கைரி ஜமாலுடின்
வழி நடத்திய கெலுவார் செசெஜாப் விவாத நிகழ்வில் கலந்து கொண்டு
பேசிய போது அவர் சொன்னார்.
நாங்கள் அந்த அறிக்கையை கேட்டு போது, அதனை ஆய்வு செய்வதற்கு
தங்களுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக பிளான் மலேசியா
கூறியது. நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்று
பின்னர் எங்களிடம் தெரிவித்தனர். இதன் விளைவாகவே அந்த திட்டத்தை
ரத்து செய்வது தொடர்பான அறிவிப்பை நாங்கள் வெளியிட்டோம் என்றார்
அவர்.
உண்மையில் வரும் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலை
முன்னிட்டு இந்த அறிவிப்பை நீங்கள் வெளியிடவில்லையா? என
கேட்டபோது “நிச்சயமாக இல்லை“ என்று அமிருடின் உடனடியாக
பதிலளித்தார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அந்த நெடுஞ்சாலைத் திட்டத்தின்
ரத்து தொடர்பான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது குறித்து பல
தரப்பினர் கேள்வியெழுப்பியிருந்தனர். வாக்குகளைக் கவர்வதற்கான
ஜனரஞ்சக நடவடிக்கையாக இது அமைக்கிறது என்றும் அவர்கள்
குற்றஞ்சாட்டியிருந்தனர்.








