கோலாலம்பூர், ஆக 8- மலேசியாவுக்கு இவ்வாண்டில் வருகை தரும்
சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை 1 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமாக
இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஏற்கனவே கணிக்கப்பட்ட 1 கோடியே 61
லட்சம் சுற்றுப்பயணிகளை விட இது அதிகமாகும் என்று டூரிசம்
மலேசியா தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அம்மார் அப்துல் காபார்
கூறினார்.
விமானப் பயண எண்ணிக்கை உயர்வு, வாடகை விமானச் சேவை
அதிகரிப்பு, ஆண்டு இறுதி விடுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களின்
அடிப்படையில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கான இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இவ்வாண்டில் 1 கோடியே 61 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை
ஈரக்க நாம் இலக்கு நிர்ணயித்துள்ளோம். எந்தவொரு பாதிப்பும் இல்லாத
பட்சத்தில் 1 கோடியே 80 லட்சம் சுற்றுப்பயணிகள் வரை நாட்டிற்கு
வருவர் என எதிர்பார்க்கிறோம். இது நாம் எதிர்பார்த்ததை விட
அதிகமாகும். இந்த எண்ணிக்கை சாத்தியமாகும் என்பதில் நாங்கள் மிகுநத்
நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார் அவர்.
நேற்றிரவு இங்கு ஜோர்டான் சுற்றுலா வாரிய கண்காட்சி மற்றும் விருந்து
நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் 45 லட்சம் வெளிநாட்டுச்
சுற்றுப்பயணிகள் நாட்டிற்கு வந்ததாக கூறிய அம்மார், சுற்றுலாவை
ஊக்குவிப்பதற்கு ஏதுவாக வாடகை விமானச் சேவை நடத்துநர்களுக்கு
வழங்கப்படவிருக்கும் ஊக்குவிப்புகள் குறித்த அறிவிப்பை அரசாங்கம்
விரைவில் வெளியிடும் என்றார்.
நாட்டில் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கு அட்டவணை விமானச்
சேவைகளை மட்டும் மலேசியா நம்பியிருக்க முடியாது என்றும் அவர்
குறிப்பிட்டார்.








