அலோர் ஸ்டார், ஆக 8- விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலின் போது
கெடா மாநிலத்தில் 19 தொகுதிகளை வெல்ல பக்கத்தான் ஹராப்பான்-
பாரிசான் நேஷனல் கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் முதல் வாரத்தில் கிடைத்த ஆதரவு மற்றும் கெடா
வாக்காளர்களை கவர்வதற்கு கட்சிகளின் தேர்தல் இயந்திரங்கள்
மேற்கொண்டு வரும் அளப்பரிய பணி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த
நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகப் பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர்
டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
இதன் பின்னர் நாங்கள் லங்காவியில் உள்ள ஆயர் ஹங்காட் மற்றும்
குவா ஆகிய தொகுதிகளுக்குச் செல்லவுள்ளோம். நாங்கள் சிடாம், பாக்கார்
ஆராங், லுனாஸ், புக்கிட் செலம்பாவ், கூலிம் ஆகிய தொகுதிகள் மீது
அதிக கவனம் செலுத்திய காரணத்தால் தொடக்கத்தில் இவ்விரு
தொகுதிகளும் எங்களின் வெற்றிக்கான இலக்கில் இடம்
பெற்றிருக்கவில்லை.
எனினும், முதல் வார அறிக்கையின் அடிப்படையில் வெற்றியைப்
பெற்றுத் தரக்கூடிய சாத்தியம் உள்ளவையாக இவ்விரு தொகுதிகளும்
உள்ளதை சமிக்ஞைகள் காட்டுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
கெடா மாநிலத்தில் 36 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. சட்டமன்றம்
கலைக்கப்படுவதற்கு முன்னர் பெரிக்கத்தான் வசம் 20 தொகுதிகளும்
(பாஸ்-14, பெர்சாத்து 6), பக்கத்தான் வசம் 10 தொகுதிகளும் (பிகேஆர்-5,
அமானா-3, ஜசெக-2) பாரிசான் மற்றும் பெஜூவாங் வசம் தலா இரு
தொகுதிகளும் இருந்தன.
பிகேஆர் கட்சியைச் சேர்ந்த டத்தோ ஜோஹாரி அப்துல் நாடாளுமன்ற
சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்ப்பட்டதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த
குருண் தொகுதியும் கடந்த ஜூன் 14ஆம் தேதி டத்தோ முகமது ஈசா காலமானதைத் தொடர்ந்து அவர்ர சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெலாந்தேக் தொகுதியும் இதுவரை காலியாகவே இருந்து வருகின்றன.








