கோலாலம்பூர், ஆக 7- தனக்குச் சேர வேண்டிய 87,000 வெள்ளி கடன்
தொகையை முன்னாள் கணவர் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததால்
வெகுண்டெழுந்த மனைவி, அவரை சரமாரியாகத் தாக்கி காயப்படுத்தினார்.
இந்தச் சம்பவம் இங்குள்ள அம்பாங், புக்கிட் இண்டாவிலுள்ள ஒரு வீட்டில்
நேற்று மாலை நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர்
ஏசிபி முகமது அஸாம் கூறினார்.
கணக்காய்வாளராக வேலை செய்யும் 38 வயதுடைய அந்த பெண்
கடனைத் திரும்பக் கேட்கும் நோக்கில் நேற்று மாலை 6.55 மணியளவில்
28 வயதான தன் முன்னாள் கணவரின் வீட்டிற்குச் சென்றதாக அவர்
சொன்னார்.
அங்கு கடன் விவகாரம் தொடர்பில் அந்த முன்னாள் கணவரை
கடுமையாகத் திட்டியதோடு அவரின் வாயிலும் அம்மாது குத்தியுள்ளார்.
அதோடு மட்டுமின்றி சிமெண்ட் பூச பயன்படும் உபகரணத்தைக் கொண்டு
அவரின் தலையிலும் தாக்கியுள்ளார். அது போதாதென்று அவ்வாடவரை
வயிற்றில் எட்டியும் உதைத்துள்ளார் என்று அவர் இன்று இங்கு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் ஒரு வணிகரான அப்பெண்ணின் முன்னாள்
கணவர் கொடுத்த புகாரின் பேரில் அம்மாது நேற்றிரவு 9.45 மணியளவில்
அம்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப்
பிரிவில் கைது செய்யப்பட்டதாக முகமது அஸாம் குறிப்பிட்டார்.
அத்தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளதோடு கடந்த மாதம் 11ஆம் தேதி
அவர்கள் விவாகரத்து பெற்றதாக அவர் மேலும் சொன்னார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரையிலான
சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை
செய்யும் குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவு மற்றும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் 18ஏ பிரிவுகளின் அம்மாது விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.








