தாசேக் குளுகோர், ஆக 7- மாநிலத் தேர்தலில் பினாங்கு, நெகிரி செம்பிலான் மற்றும் சிலாங்கூரில் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வதில் ஒற்றுமை அரசுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.
உண்மையில், இந்த மூன்று மாநிலங்களும் பாரம்பரியமாகவே பக்காத்தான்
ஹராப்பானின் கோட்டைகளாக விளங்கும் நிலையில் பாரிசான் நேஷனல் ஆதரவும் ஒற்றுமை அரசாங்கத்திற்கான வாக்குகள் எண்ணிக்கையை அதிகரிக்கும்
என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
என்னைப் பொறுத்த வரை பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில்
எந்தப் பிரச்சனையும் இல்லை. என் கருத்துப்படி, இந்த மூன்று மாநிலங்களிலும்
மலாய்க்காரர்களின் வாக்குகள் நாம் வெற்றி பெறுவதற்கான அளவைத் தாண்டிவிட்டன.
இதனிடையே, கெடா மற்றும் கிளந்தானில், ஆதரவு அடிப்படையில் சாதகமான
முன்னேற்றம் காணப்படுகிறது. ஏனெனில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு மலாய் ஆதரவாளர்களின் வாக்கு பலம் இங்கு உண்மையில் அதிகமாக உள்ளது.
எனவே இந்த இறுதி வாரம் வரை நிலைமையைக் காணலாம் என்றார் அவர்.
நேற்றிரவு இங்குள்ள தெலுக் ஆயர் தாவாரில் நடைபெற்ற மடாணி தேர்தல்
பிரசாரத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
திரங்கானு மாநிலத்தைப் பொறுத்தவரை பாரிசான் நேஷனல் முன்னணியில்
இருப்பதாக பொருளாதார அமைச்சருமான அவர் கூறினார்.
பினாங்கில் மூன்று வாரங்களுக்கு முன்னர் 30 முதல் 31 விழுக்காடாக இருந்த மலாய்
வாக்காளர்களின் ஆதரவு இப்போது 42 விழுக்காடாக அதிகரித்தது குறித்து கருத்துரைத்த ரபிஸி, மதில் மேல் வாக்காளர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும்
யோசனைகளையும் திட்டங்களையும் கொண்ட அரசியல் கட்சியை அவர்கள்
விரும்புவதை இது புலப்படுத்துகிறது என்றார்.








