கோலாலம்பூர், ஆக 7- ஆறு மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு நாளை
நடைபெறவிருக்கும் தொடக்க வாக்களிப்பில் 97,388 இராணுவ வீரர்களும்
போலீசாரும் தங்கள் துணைவியருடன் தங்கள் ஜனநாயகக் கடமையை
நிறைவேற்றவுள்ளனர்.
இந்த மாநிலத் தேர்தல்களின் ஒரு பகுதியாக திரங்கானு மாநிலத்தின்
கோல திரங்கானு நாடாளுமன்றத்திற்கான இடைத் தேர்தலும்
நடைபெறுகிறது.
ஊழல் நிகழ்ந்துள்ள காரணத்தால் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
15வது பொதுத் தேர்தலில் அந்த தொகுதியில் பாஸ் கட்சி வேட்பாளர்
டத்தோ அகமது அம்சாட் ஹஷிம் பெற்ற வெற்றி செல்லாது என
திரங்கானு மாநில தேர்தல் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி
தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும்
திரங்கானுவில் இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில்
கடந்த 2023 ஜூன் மாதம் 21ஆம் தேதி ஆகக்கடைசியாக புதுப்பிக்கப்பட்ட
வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம்
கூறியது.
இந்த் தேர்தலில் 49,660 இராணுவ வீரர்களும் 47,728 போலீஸ்காரர்களும்
தங்கள் துணைவியருடன் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்வர். இந்த
தொடக்க கட்ட வாக்களிப்புக்கு 260 வாக்களிப்பு மையங்கள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் கெடா மாநிலத்திலுள்ள 36 தொகுதிகளுக்கும் கிளந்தானில்
உள்ள 45 தொகுதிகளுக்கும் திரங்கானுவில் உள்ள 32 தொகுதிகளுக்கும்
பினாங்கில் உள்ள 40 தொகுதிகளுக்கும் சிலாங்கூரில் உள்ள 56 தொகுதிகளுக்கும் நெகிரி செம்பிலானில் உள்ள 36 தொகுதிகளுக்கு வாக்களிப்பு நடைபெறுகிறது.








