ஜோர்ஜ் டவுன், ஆக 6- அடுத்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில்
மலேசியாவை மகத்தான பொருளாதார சக்தியாகத் தாம் மாற்றவிருப்பதாகப்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூளுரைத்துள்ளார்.
நாடு தொடர்ந்து மேம்பாடு கண்டு வருவதோடு அரசியல்
நிலைத்தன்மையுடனும் அதிகமான அந்நிய முதலீடுகளை ஈர்க்கும்
நிலையிலும் இருந்து வருகிறது என்று அவர் சொன்னார்.
டெஸ்லா இன்கார்ப்ரேடட் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை
அதிகாரி எலன் மாஸ்க்குடன் அண்மையில் தாம் நடத்திய தனிப்பட்ட
சந்திப்பின் போது ,சைபர் ஜெயாவில் இவ்வாண்டு தனது நிறுவனத்தின்
தலைமையகத்தை நிறுவும் கடப்பாட்டை அவர் வெளிப்படுத்தியதாக
அன்வார் குறிப்பிட்டார்.
மாஸ்கின் இந்த நடவடிக்கை மலேசியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய
கௌரவமாகும். வெளிப்படை போக்கு கொண்ட தலைமைத்துவத்துடன்
ஒற்றுமை அரசாங்கம் முன்வைத்துள்ள மடாணி பொருளாதாரம் உள்ளிட்ட
நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக இது
விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
மலேசியாவை மகத்தான பொருளாதார சக்தியாகவும் அனைத்து
மலேசியர்களுக்குமான நாடாகவும் உருவாக்குவதே எனது
கனவாகும் என்றும் அவர் கூறினார்.
ஒற்றுமை நிறைந்த மக்களுடன் மகத்தான நாடாக மலேசியா மீண்டும்
உருவாக வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று இங்குள்ள பெக்கான்
சுங்கை ஆராவில் நேற்றிரவு நடைபெற்ற மெகா மடாணி பிரசாரக்
கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
உலகில் முன் உதாரண நாடாக மலேசியா திகழ்வதற்கு ஏதுவாக
அரசாங்கப் பணம் கொள்ளையிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும்
அன்வார் வலியுறுத்தினார்.
எதிர்வரும் 12ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் அனைத்து மலேசியர்களையும்
பிரதிநிதிக்கும் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கும்படியும் அவர்
வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.








