கோல சிலாங்கூர், ஆக 5- வரும் 12ஆம் தேதி நடைபெறும் மாநிலத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் புஞ்சா ஆலமில் நிலவும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறைப் பிரச்சனையை புத்ரா ஜெயாவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லவுள்ளதாக ஜெராம் தொகுதிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் கூறுகிறார்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசாங்கம் ஆட்சியில் இருப்பதால் இப்பகுதியில் போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் சுகாதார கிளினிக் அமைப்பது தொடர்பான பரிந்துரையை தம்மால் எளிதாக முன்வைக்க முடியும் என்று டத்தோ ஜஹாயா இப்ராஹிம் தெரிவித்தார்.
தற்போது கிளினிக் டோ புக்கிட் செராக்காவிலும் தீயணைப்பு நிலையம் பெஸ்தாரி ஜெயாவிலும் போலீஸ் நிலையம் சவுஜானா உத்தாமாவிலும் உள்ளன. புஞ்சா ஆலம் பகுதியில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த அடிப்படை வசதிகள் இங்கு அவசியம் தேவைப்படுகிறது.
மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் இந்த திட்டங்களை அமல்படுத்துவது எளிதாக இருக்கும் என்று சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தேர்தல் பரப்புரைகள் குறித்து கருத்துரைத்த ஜஹாயா, பொது மக்களை அணுகி வாக்கு சேகரிப்பதில் தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிகளுக்கிடையிலான அணுக்கமான ஒத்துழைப்பு தமக்கு பெரிதும் துணை புரிவதாக அவர் சொன்னார்.
இத்தொகுதியிலுள்ள பொரும்பாலானோர் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் இது வரை தேர்தல் பிரசாரம் சீராக நடைபெற்று வருகிறது. மேலும் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமதுவும் களத்தில் இறங்கி பிரசாரம் செய்வது எங்களுக்கு மேலும் புத்துணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்








