கோலாலம்பூர், ஆக 1 - வெளி தரப்பினர்
இனியும் அதிக கமிஷன் பெறுவதைத்
தடுக்கும் வகையில் மலேசிய ஆயுதப்
படைகளின் சொத்துக் கொள்முதல் முறை
மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
வலியுறுத்தினார்.
கப்பல்கள், விமானங்கள் மற்றும் டாங்குகள்
போன்ற தேசிய பாதுகாப்பு சொத்து
உபகரணங்களின் கொள்முதல் நடவடிக்கை
பொருளாதார வளர்ச்சி, மலேசியாவின்
புவிசார் அரசியல் மற்றும் வியூக நிலைக்கு
ஏற்ப ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதால் இந்த
மறுசீரமைப்பு அவசியமாகிறது என்று அவர்
கூறினார்.
உங்கள் அனைவரிடமும் ஏன் இதனை நான்
குறிப்பிடுகிறேன் என்றால்
இராணுவத்திற்கும், நம் அனைவருக்கும்
பாதுகாப்புத் துறையில் நாட்டின் தயார்நிலை
மிவும் முக்கியமான அம்சமாகும் என அவர்
சொன்னார்.
எனவே, சொத்துக் கொள்முதல் முறையை
சீரமைக்க ராணுவத் தலைமைக்கு நாங்கள்
பரிந்துரைக்கிறோம். இதற்கு மேல் வெளி
தரப்பினரின் தலையீடு இருக்க முடியாது.
சிறந்த போர்க்கப்பல்கள், விமானங்கள்,
டாங்குகள் மற்றும் பிற உபகரணங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு
படைத் தலைவர்களே இனி பொறுப்பு. அதே
தவறுகளை மீண்டும் நிகழக்க்கூடாது.
அதிகப்படியான கமிஷன்கள் மூலம் எங்கள்
உபகரணங்கள் உறுதியான பாதுகாப்பை
வழங்க முடியாது என்று அவர் கூறினார்.
நேற்று விஸ்மா பெர்விரா ஏ.டி.எம்.மில்
மலேசிய ஆயுதப்படை வீரர்களின்
தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத்
திட்டத்தின் தொடக்க நிகழ்வில் அன்வார்
இவ்வாறு கூறினார்.
நாட்டின் அமைதி மற்றும்
நிலைத்தன்மையைப் பேணுவதில்
பாதுகாப்புச் சொத்துக்களின் திறனைக்
குறைத்து மதிப்பிட முடியாது என்று கூறிய
அன்வார், இதற்காக செலவின ஒதுக்கீட்டை
அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிலர் குறைத்து
மதிப்பிடுவதாகவும் சொன்னார்.








