கோலாலம்பூர், ஜூலை 30. தேர்தல் குற்றங்கள் மற்றும் 3ஆர் (இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்கள்) விவகாரங்களை கவனிக்க புக்கிட் அமானை மையமாகக் கொண்ட சிறப்பு ஓப் சந்தாஸ் நடவடிக்கை அறை மறுபடியும் திறக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட ஆறு மாநிலங்களில் தேர்தல் செயல்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் அந்த சிறப்பு ஓப் சந்தாஸ் நடவடிக்கை அறைக்கு அனுப்பப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் கூறினார்.
சம்பந்தப்பட்ட ஆறு மாநிலங்களில் உள்ள போலீஸ் தலைமையகங்களுடன் சிறப்பு ஓப் சந்தாஸ் இணைய இணைப்பு ஏற்படுத்தப்படும் என்பதோடு தேர்தல் சமயத்தில் நிகழக்கூடிய குழப்பங்கள் மற்றும் சினமூட்டும் நடவடிக்கைகள் காணொளி வடிவில் சம்பந்தப்பட்ட போலீஸ் தலைமையகங்களுக்கு உடனடியாக அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தகவல்களை உடனுக்குடன் நடவடிக்கை அறைக்கு அனுப்புவதற்கும் ஏதுவாக 82 சிறப்பு ஓப் சந்தாஸ் குழுக்கள் சம்பந்தப்பட்ட ஆறு மாநிலங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
இந்த தேர்தலின் போது 17,176 போலீஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட ஆறு மாநிலங்களில் களப்பணியில் ஈடுபடுவர். மேலும், மேலும் 572 ரேலா உறுப்பினர்களும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வர் என்றார் அவர்.
மாநிலத் தேர்தலை முன்னிட்டு நேற்று இங்குள்ள புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.








