கோத்தா பாரு, ஜூலை 29- போலீஸ் ரோந்துக் காரை மோதித் தள்ளி
விட்டு தப்ப முயன்ற போதைப் பொருள் கடத்தல் ஆசாமியை போலீசார்
வளைத்துப் பிடித்தனர். இச்சம்பவம், பாசீர் மாஸ், லுபோங் ஜொங் தாமான்
வீரா ஜெயாவில் இன்று அதிகாலை நிகழ்ந்தது.
ஜன்னல் கண்ணாடி திறந்த நிலையில் காணப்பட்ட நீலநிற பெரேடுவா
மைவி காரின் மீது சந்தேகம் கொண்ட பாசீர் மாஸ் மாவட்ட போலீஸ்
தலைமையகத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அக்காரை
அணுகி சோதனையிட முயன்றதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர்
டத்தோ முகமது ஜாக்கி ஹருண் கூறினார்.
போலீசாரின் வருகையை உணர்ந்த அக்காரிலிருந்து ஆடவன் காரை
வேகமாக பின்னோக்கி நகர்த்தி போலீஸ் ரோந்துக் காரின் முன்பகுதியை
மோதியப் பின்னர் அங்கிருந்து தப்ப முயன்றான். எனினும், கட்டுப்பாட்டை
இழந்த அக்கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தை மோதி நின்றது
என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த காரை போலீசார் சோதனையிட்டபோது அதில் சுமார் 49,500 வெள்ளி
மதிப்புள்ள 1,790.45 கிராம் ஷாபு போதைப் பொருள் பிளாஸ்டிக் பைகளில்
வைக்கப்பட்டிருந்த து கண்டு பிடிக்கப்பட்டது என்றார் அவர்.
காரிலிருந்து தப்பியோடிய 21 வயது சந்தேகப் பேர்வழி இன்று பின்னிரவு
12.50 மணியளவில் தாமான் வீரா ஜெயாவிலுள்ள வீடொன்றில் கைது
செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.








