கூலாய், ஜூலை 10: மலேசியர்கள் 2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரை முகநூல் (FB) மற்றும் இன்ஸ்டாகிராம் (IG) தளங்கள் மூலம் இணைய மோசடிக்கு ஆளாகி RM302 மில்லியன் வரை இழப்பை சந்தித்துள்ளனர்.
முகநூல் தளத்தினால் ஏற்பட்ட மோசடி மூலம் பதிவு செய்யப்பட்ட இழப்புகள் RM232 மில்லியன் என்றும் இன்ஸ்டாகிராம் மூலம் RM70 மில்லியன் இழப்பீடு பதிவு ஏற்பட்டுள்ளது என்றும் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துணை அமைச்சர், தியோ நி சிங் தெரிவித்தார்.
"நாங்கள் மெட்டாவுடன் (முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம்) ஒரு சந்திப்பையும் நடத்தியுள்ளோம். எனவே அவர்களின் தளத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் இந்த சிக்கல் உண்மையில் ஒரு தீவிரமான பிரச்சனை என்பதை நிரூபிக்க விரும்புகிறோம்.
"இந்த ஆண்டு ஜூன் வரை, முகநூல் மோசடி மூலம் RM60 மில்லியன் இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொகை 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளைக் காட்டிலும் சற்று அதிகமாக உள்ளது.
"அதே சமயம் இந்த ஆண்டின் ஆறு மாதங்களுக்குள் இன்ஸ்டாகிராம் மூலம் RM25 மில்லியன் இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது".
அல்டிமேட் எம்எம்ஏ ஃபிட்னஸ் & தற்காப்பு கலை நிறுவனத்திற்கு RM6,000 நன்கொடை வழங்கியப் பிறகு தியோ இவ்வாறு கூறினார்.
சமூக ஊடகப் பயனர்கள் அதிக விழிப்புணர்வோடு இருக்குமாறும், மோசடிக்கு ஆளாகாமல் இருக்க டிஜிட்டல் கல்வியறிவை கொண்டிருக்குமாறும் தியோ அறிவுறுத்தினார்.
"சமீபத்திய சந்திப்பின் போது நாங்கள் மெட்டா பிரதிநிதிக்கு மிகத் தெளிவான செய்தியை அனுப்பியுள்ளோம். அவர்கள் இந்த விஷயத்தில் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துவதாக உறுதியளித்தனர்.
– பெர்னாமா








