தும்பாட், ஜூன் 15- கல்வியைப் பாதியில் கைவிடும் பழக்கம் மாணவர்கள்
மத்தியில் காணப்படுவதற்கு ஏழ்மையும் ஒரு காரணம் எனக்
கண்டறியப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக அரசு சாரா அமைப்புகளுடன்
இணைந்து தரவுகளைச் சேகரிக்கும் பணியில் கல்வியமைச்சு ஈடுபட்டு
வருவதாக அவர் சொன்னார்.
எனினும், மாணவர்கள் கல்வியை பாதியில் கைவிடும் பிரச்சனையைக்
களைவது கல்வியமைச்சு மற்றும் ஆசிரியர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட
விவகாரம் கிடையாது. மாறாகப் பெற்றோர் மற்றும் சமூக உள்ளிட்ட
அனைத்து தப்பினரின் ஒத்துழைப்பும் இதில் தேவை என்று அவர்
சொன்னார்.
இங்குள்ள பூலாவ் பெலுரு தேசியப் பள்ளியை கே9 எனப்படும் விரிவாக்கப்
பள்ளியாகப் பிரகடனப்படுத்தும் நிகழ்வுக்கு தலைமை தாங்கியப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கே9 பள்ளித் திட்டம் குறித்து விவரித்த அமைச்சர், மாணவர்கள் மத்தியில்
காணப்படும் கல்வியை பாதியில் கைவிடும் பிரச்சனைக்குத் தீர்வு
காண்பதற்காக ஏற்படுத்த சிறப்பு பள்ளித் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்
என்றார்.
பூலாவ் பெலுறு தேசியப் பள்ளி கிளந்தான் மாநிலத்தின் முதல் கே9
பள்ளியாக விளங்குகிறது. மாணவர்கள் கல்வியைக் கைவிடுவதை
தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டங்களில் இதுவும்
ஒன்றாக விளங்குகிறது என்றார் அவர்.
பகாங், சிலாங்கூர், பேராக், சரவா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 16
கே9 பள்ளிகள் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.








