குவாந்தான், ஜூன் 15- பெக்கான் நகரில் நான்கு கிலோ மீட்டர் ஓட்டத்தில்
கலந்து கொண்ட 15 வயது மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து
வெப்பச் சோர்வின் தாக்கத்திற்கு ஆளானார்.
பெக்கான் மருத்துவமனையிலிருந்து குவாந்தான் தெங்கு அம்புவான்
அப்ஸான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அம்மாணவரின் உடல்நிலை
தற்போது சீராக இருந்து வருவதாகப் பகாங் மாநிலச் சுகாதார இயக்குநர்
டத்தோ டாக்டர் நேர் அஸிமி யூனுஸ் கூறினார்.
பெக்கான் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது
அம்மாணவரின் உடலில் வெப்ப நிலை அபரிமித உயர்வு கண்டதோடு
நாடித் துடிப்பு அதிகமாகவும் பேச்சு மற்றும் மூளையின் செல்பாடுகளில்
பாதிப்பும் ஏற்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
குவாந்தான் தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையின் தீவிர
சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அம்மாணவருக்குத் தீவிர சிகிச்சை
வழங்கப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
வெப்பக் காலத்தில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்
கொள்ளுமாறு பொது மக்களைக் கேட்டுக் கொண்ட அவர், உடலில்
உஷ்ணம் அதிகரிக்காமலிருப்பதை உறுதி செய்ய அதிக நீரை அருந்துமாறு
கேட்டுக் கொண்டார்.








