கோலாலம்பூர், ஜூன் 13: ஜனவரி முதல் ஜூன் 3 வரை டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 158 சதவீதம் அதிகரித்து 48,712 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
டிங்கி காய்ச்சலால் மொத்தம் 34 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.
22வது தொற்றுநோய் வாரத்தில் (மே 28 முதல் ஜூன் 3 வரை), டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,455 ஆக இருந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் 2,638 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 183 சம்பவங்கள் குறைந்துள்ளன.
“இந்த ஆண்டு 22வது தொற்றுநோய் வாரத்தில் (ME22) டிங்கி காய்ச்சலினால் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன என நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை காட்டுகிறது.
முந்தைய வாரத்தில் கண்டறியப்பட்ட 72 ஹாட்ஸ்பாட் இடங்களுடன் ஒப்பிடும்போது தற்போது அந்த எண்ணிக்கை 82 ஆக அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.
"சிலாங்கூரில் மொத்தம் 62 இடங்களும், பினாங்கில் ஒன்பது இடங்களும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் ஐந்து இடங்களும், சபாவில் நான்கு இடங்களும், கெடா மற்றும் பேராக்கில் தலா ஒன்றும் உள்ளன" என்று அவர் கூறினார்.
டிங்கி காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகள் கண்களுக்கு பின்னால் வலி, தலைவலி, மூட்டு அல்லது தசை வலி மற்றும் தலைசுற்றல் திடீர் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது.
மேலும், வீட்டின் உள்ளேயும் வெளியேயும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
– பெர்னாமா








