தாப்பா, ஜூன் 9- இங்குள்ள லாத்தா இஸ்கந்தார் பகுதியில் பெண் கார்
ஓட்டுநரை ஒருவரைத் தாக்கிய ஆடவருக்குத் தாப்பா மாஜிஸ்திரேட்
நீதிமன்றம் இன்று ஏழு நாள் சிறைத்தண்டனை விதித்தது.
வழக்கறிஞர் துணையின்றி நீதிமன்றத்தில் ஆஜரான முகமது ஜைம்
ஃபாயிஸ் தார்மிஸி (வயது 29) என்ற அந்த ஆடவர் தனக்கு எதிராக
குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் சித்தி
ஹானும் முகமது சா இந்த தீர்ப்பை வழங்கினார்.
அச்சுறுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் 506வது பிரிவு மற்றும்
வேண்டுமென்றே தாக்கிய குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 323வது
பிரிவுகளின் கீழ் அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரையிலானச் சிறை
அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க முதலாவது சட்டப் பிரிவு
வகை செய்கிறது. இரண்டாவது சட்டப் பிரிவின் கீழ் குற்றவாளி என
நிரூபிக்கப்படுவோருக்கு ஓராண்டு வரைச் சிறைத்தண்டனை அல்லது 2,000
வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
இவ்விரு குற்றச்சாட்டுகளிலும் அந்த ஆடவருக்குத் தலா ஏழு நாட்கள்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் தண்டனை விதிக்கப்பட்ட
நாளிலிருந்து இந்த தண்டனையை ஏகக் காலத்தில் அனுபவிக்க
மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.








