MEDIA STATEMENT

போதைப் பொருள் விநியோக கும்பலைச் சேர்ந்த மூவர் கைது- வெ.40 லட்சம் ஹெரோயின் பறிமுதல்

20 பிப்ரவரி 2023, 11:47 AM
போதைப் பொருள் விநியோக கும்பலைச் சேர்ந்த மூவர் கைது- வெ.40 லட்சம் ஹெரோயின் பறிமுதல்

ஷா ஆலம், பிப் 20- கடந்த புதன்  கிழமை கிள்ளான் வட்டாரத்திலும் கெடா மாநிலத்தின் குப்பாங்கிலும் போலீசார் மேற்கொண்ட மூன்று அதிரடிச் சோதனைகளில் மூவர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 40 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி  மதிப்புள்ள 46.7 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

மாலை 3.30 மணியளவில் கிள்ளான் வட்டாரத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் பயணம் செய்த ஆடவர் ஒருவரை புக்கிட் அமான்  போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்ததாக சிலாங்கூர் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி கூறினார்.

அந்த காரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3.8 கிலோ எடையுள்ள பத்து பொட்டலங்கள் அடங்கிய ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப் பொருள் கருப்பு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது என அவர் சொன்னார்.

கைதான நபர் கொடுத்த தகவலின் பேரில் அதே தினம் மாலை 4.20 மணியளவில் காப்பார் நகரிலுள்ள வீடொன்றில் மேலும் ஒரு சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக இங்குள்ள மாநில போலீஸ் தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இரண்டாவது சந்தேகப் பேர்வழியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 42.94 கிலோ எடையுள்ள 113 ஹெரோயின் பொட்டலங்கள் கருப்பு பிளாஸ்டி பையில் வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

இவ்விருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கெடா மாநிலத்தின் குப்பாங்கிலுள்ள வீடொன்றில் மேலும் ஒரு நபர் அதே தினம் கைது செய்யப்பட்டார் என்றார் அவர்.

கைது  செய்யப்பட்ட மூவரும் 37 முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறிய அவர், அவர்களில் ஒருவர் தொழிற்சாலை பஸ் ஓட்டுநராக வேலை செய்யும் வேளையில் மற்ற இருவரும் வேலை இல்லாதவர்கள் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதோடு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117வது பிரிவின் கீழ் அவர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் சொன்னார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.