ஷா ஆலம், பிப் 18- மாநில அரசின் புதிய நலத் திட்டங்களையும் சீரமைக்கப்பட்ட திட்டங்களையும் அறிமுகப்படுத்தும் உலு சிலாங்கூர் மாவட்ட நிலையிலான ஜெலாஜா கித்தா சிலாங்கூர் (ஜே.கே.எஸ்.பி.) நிகழ்வு நாளை நடைபெறவிருக்கிறது.
முன்பு ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் என அழைக்கப்பட்ட இந்த நிகழ்வு ஓவாசிஸ் பத்தாங் காலியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
மக்களுக்கு பயன் தரக்கூடிய இல்திஸாம் பென்யாயாங் சிலாங்கூர் திட்ட அறிமுகம் உள்பட பல ஜனரஞ்சக நிகழ்வுகளுக்கு இந்த ஜே.கே.எஸ்.பி. திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஜே.கே.எஸ்.பி திட்டத்தின் இரண்டாவது நிகழ்வாக இது அமைந்துள்ளது. இதன் முதல் நிகழ்வு கிள்ளான், ஸ்ரீ பெராந்தாவ் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் நடைபெற்றது.
அதிக அங்கங்களுடன் இடைவிடாத ஒருநாள் நிகழ்வாக இந்த ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் முன்னதாக கூறியிருந்தார்.
கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இலவச மருத்துவப் பரிசோதனை, மலிவு விற்பனை, கண்காட்சி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு அங்கங்கள் இடம் பெற்றன.
ஐ.பி.ஆர். எனப்படும் பெடுலி ராக்யாட் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக விளங்கும் 35 கோடி வெள்ளி ஒதுக்கீட்டிலான இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் மாநில மக்களுக்கு பல்வேறு அனுகூலங்களை வழங்குகிறது.



