ஷா ஆலம், ஜன 3- மலேசிய இந்து சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் தன்முனைப்பு மற்றும் இளையோர் மேம்பாட்டு முகாம் அண்மையில் இங்குள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
மாநில அரசின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மூன்று நாள் பயிற்சியில் 100 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். சிலாங்கூர் இந்தியர் ஆலோசக மன்றத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட மேலும் ஒரு திறன் மேம்பாட்டு நிகழ்வாக இது அமைந்துள்ளது.
இந்த நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் இந்திய சமூகத்திற்கான மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மாணவர்கள் சுய திறனும் உயரிய பண்பு நலன்களும் கொண்டவர்களாக திகழ்வதை உறுதி செய்யும் நோக்கில் இந்த மூன்று நாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.








