சிரம்பான், டிச 18- பதிமூன்று இளம் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற மலேசிய ஆயுதப்படையின் லோரி டோல் சாவடிகளுக்கு இடையில் உள்ள தடுப்புச் சுவரை மோதியதில் நான்கு வீரர்கள் கடுமையான காயங்களுக்குள்ளாகினர்.
இச்சம்பவம், சிரம்பான்-போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் 7.1வது கிலோ மீட்டரில் உள்ள டோல் சாவடியில் நேற்று முன்தினம் இரவு 7.10 மணியளவில் நிகழ்ந்தது.
அந்த லோரியின் பிரேக் செயல் இழந்த காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி நந்தா மாரோப் கூறினார்.
இந்த விபத்தில் அந்த லோரியின் ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த வேளையில் மேலும் எண்மர் லேசான காயங்களுக்குள்ளாகினர். இருவர் காயமின்றி தப்பினர் என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
இருபத்தைந்து வயதுடைய வீரர் ஓட்டிய அந்த லோரி அந்த டோல் சாவடியின் இடது பக்க தடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது திடீரென பிரேக் செயல்படாமல் போகவே கட்டுப்பாட்டை இழந்து டோல் சாவடியின் தடுப்புச் சுவரை மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இளம் இராணுவ வீரர்களை ஏற்றிய அந்த லோரி போர்ட்டிக்சன், ஸ்ரீ ரூசா இராணுவ முகாமிலிருந்து சிரம்பான் டெர்மினல் ஒன், பஸ் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இவ் விபத்து நிகழ்ந்தது.
புதிதாக இராணுவத்தில் சேர்ந்த அவர்கள் அனைவரும் அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்துக் கொண்டு விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு அந்த பஸ் முனையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர் என்று ஏசிபி நந்தா மேலும் சொன்னார்.








