உலு சிலாங்கூர், டிச 5- மாநில அரசின் ஏற்பாட்டில் அடுத்தாண்டில் நடத்தப்படவிருக்கும் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு மாநில மக்கள் குறிப்பாக மகளிர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தில் பங்கேற்பதன் வாயிலாக இரத்த, சிறுநீர் சோதனையோடு கண், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகளையும் முன்கூட்டியே கண்டறிய முடியும் என்று சிலாங்கூர் மகளிர் சமூக நல அமைப்பின் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது கூறினார்.
இந்த சோதனையின் மூலம் ஆபத்தான நோய் தொடர்பான அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். அதோடு நோயின் கடும் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் பொருளாதாரச் சுமையையும் குறைக்கவும் இயலும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில மக்கள் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு உலு சிலாங்கூர் மாவட்ட நிலையிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் ஒரு அங்கமாக நடைபெற்ற மகளிர் அமைப்புகளுடனான பெக்காவானிஸ் கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் மூலம் சுமார் 45,000 பேர் பங்கு கொண்டு பயன் பெற்றனர்.



