ஷா ஆலம், டிச 2- தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டுப் பிரதேசத் திட்டம் (இட்ரிஸ்) பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்லது நடப்பிலுள்ள நகர்ப்புறங்களை உள்ளடக்கவில்லை.
சிப்பாங் மற்றும் கோல லங்காட் மாவட்டங்களிலுள்ள பகுதிகளை மையமாக கொண்ட இந்த உத்தேச மேம்பாடு செம்பனைத் தோட்டங்கள் மற்றும் உரிமையாளர்களால் இன்னும் மேம்படுத்தப்படாத நிலங்களை உள்ளடக்கியுள்ளதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
சிப்பாங் மற்றும் கோல லங்காட்டில் பெரிய அளவில நிலங்களைக் கொண்டுள்ள தனியார் துறையினரால் இந்த மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என அவர் சொன்னார்.
இந்த தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தை அமல்படுவதற்கான நோக்கங்களில் சிலாங்கூரிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சமநிலையான மேம்பாட்டைக் கொண்டு வருவதும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் கிள்ளான் பள்ளத்தாக்கை மட்டும் மையமாக கொண்டிருப்பதைக் காண நாம் விரும்பவில்லை என்று மாநில சட்டமன்றத்தில் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.
மேம்பாட்டுத் திட்டமிடலைப் பொறுத்து இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு ஐந்து முதல் பத்தாண்டுகள் வரை பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.








