ஷா ஆலம், நவ 23- இனங்களுக்கிடையே வெறுப்புணர்வைத் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இணையவாசிகள் மீது போலீசாரும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையமும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்கள் தீவிரவாத நடவடிக்கைகள் வேரூன்றும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கி விடும் என்று மேரு சட்டமன்ற உறுப்பினர் ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.
வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அறிகுறிகள் சமூக ஊடகங்களில் தென்பட ஆரம்பித்து விட்டன. ஒரு சிலர் மே 13 விவகாரத்தையும் எழுப்புகின்றனர். இத்தகைய செயல்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பையும் இஸ்லாத்தின் மேன்மைக்கு களங்கத்தையும் ஏற்படுத்தும் என்பதால் அவை தொடக்கத்திலேயே தடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இஸ்லாத்தின் புனிதத் தன்மை காக்கப்படுவதற்கு இது போன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும் எனக் கூறிய அவர், இத்தகைய விஷமத்தனங்களைச் செய்வோருக்கு எதிராக தாம் புகார் செய்யத் தயங்கப் போவதில்லை என்றார்.
சமயம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் போன்ற உணர்ச்சிகரமான விஷயங்களை எழுப்ப வேண்டாம் என்று இணையவாசிகளுக்கு தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.








