பிஸ்தாரி ஜெயா, நவ.18- மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களை மேற்கொள்ள நிதியை தேசிய கூட்டணி (பி.என்) ஒதுக்காமல் அலை கழித்தது என்று நேற்று பத்தாங் பெர்ஜுந்தையில் (பெஸ்தாரி ஜெயா) நடைபெற்ற இறுதி நாள் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சூள்கிப்லி அமாட் அம்பலப்படுத்தினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வரலாற்று பூர்வமான ஆட்சி மாற்றம் நடந்தது. நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சி வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் மானியம் வழங்கியது. 2019 ஆம் ஆண்டில் ரி.ம. 20 லட்சம் வழங்கியது. இதனால் மக்கள் மேம்பாட்டிற்கு மானியத்தை தாராளமாக பயன்படுத்தினோம்.
ஆனால் 2020 ஆம் ஆண்டில் கொள்ளைப் புறமாக ஆட்சியை கவிழ்த்த பெரிக்காத்தான் ஆட்சியின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானியம் வழங்கப் படவில்லை. மானியம் வழங்கப் படாத காரணத்தால் தான் மக்கள் மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ள முடியவில்லை. இதை தற்போது கோல சிலாங்கூரில் தேசிய முன்னணி வேட்பாளராகவும் மற்றும் அன்றைய நிதி அமைச்சரான தெங்கு சப்ரூல் தான் முக்கிய காரணம் என்று டாக்டர் சூள் கூறினார்.
ஆனால் சூள் சொல்வதை தெங்கு சப்ரூல் மறுத்துள்ளார். 2020 மற்றும் 2021 மானியம் கொடுத்துள்ளதாக நேற்று முன் தினம் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் 300,000 உணவு கூடை கொடுத்ததையே தெங்கு கூறியுள்ளார்.
மக்கள் மேம்பாட்டு மானியத்திற்கும் உணவு கூடைக்கும் பொருள் தெரியாமல் தெங்கு பேசியுள்ளார். அவருக்கு இந்த விளக்கத்தை நான் இக்கூட்டத்தின் வழி எதிராளிக்கு விளக்குகிறேன் என்று டாக்டர் சூள் விளக்கினார்.
2022 ஆண்டு தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் நம்பிக்கை கூட்டணி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் ரி.ம. 17 லட்சம் வழங்கியுள்ளார். அந்த நிதியையும் முழுமையாக செலவு செய்ய விடாமல் நாடாளுமன்றத்தை கனத்த மழை பெய்யும் காலத்தில் கலைத்து விட்டு பொதுத் தேர்தலையும் நடத்துகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை கோல சிலாங்கூர் பி.கே.ஆர் தொகுதி தலைவர் தீபன் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் பெரும்பான்மையாக இந்தியர்கள் திரண்டிருந்தனர். ஏறக்குறைய 300க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்திருந்தனர்.








