காப்பார்.நவ.10- காப்பார் நாடாளுமன்ற தொகுதியில் இம்முறை 7 முனை போட்டி நிலவுகிறது. இந்த 7 முனை போட்டியில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் அப்துல்லா சானிக்கும் தேசிய முன்னணி முகமாட் நோர் அஸ்மான் நோர் ஹிஷாமுக்குமிடையே பலத்த போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளர் அப்துல்லா சானிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது என்று காப்பார் பி.கே.ஆர் வட்டாரத்தில் நன்கு அறிமுகமான மணிவண்ணன் தெரிவித்தார்.
| தொகுதி | மலாய் | சீன | இந்திய | மற்ற | பொத்தம் |
| காப்பார் | 129662 | 28281 | 25996 | 1343 | 1852282 |
தற்போது காப்பார் நாடாளுமன்ற தொகுதியில் 70% மலாய் வாக்காளர்கள். இரண்டாவது நிலையில் 15.3% சீனர்கள் உள்ளனர். மூன்றாவது நிலையில் 14% இந்தியர்கள் உள்ளனர்.
ஒரு காலத்தில் காப்பார் நாடாளுமன்ற தொகுதி ம.இ.கா.வின் கோட்டையாக விளங்கியது. இத்தொகுதியில் ம.இ.கா.வின் தேசியத் தலைவர்களில் குறிப்பிட தக்கவராக டான் ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணிக்கவாசகம் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். அவருக்கு பிறகு ம.இ கா.வின் மூத்த தலைவர் டத்தோ வீ.கோவிந்தராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ம.இ.கா.வின் பொதுச்செயலாளர் டி.பி.விஜேந்திரன், டாக்டர் லீலா இராமா, தான் ஸ்ரீ. எம்.மகாலிங்கம், மகளிர் தலைவி கோமலா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் காப்பார் தொகுதியை ம.இ.கா.வின் கோட்டையாக உருவாக்கினார்கள்.
ஆனால் இன்று ம.இ.கா.வின் கோட்டையாக இருந்த காப்பார் தொகுதி அம்னோவிற்கு தாரை வார்த்து கொடுத்து விட்டது இன்றைய ம.இ.கா தலைமைத்துவம். இதனால் இத்தொகுதியில் உள்ள ம.இ.கா ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
மேலும் கடந்த தேர்தலிலேயே சுங்கை பினாங் தொகுதியை கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் சேர்த்து விட்டதால் சீனர்களும் கோபத்தில் தான் இருக்கிறார்கள் என ம.இ.கா. வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
மலாய்க்காரர்கள் வாக்கு பல முனைகளில் சிதறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் , பெஜுவாங், வாரிசான், பீ.பி.எம் போன்ற கட்சிகள் போட்டியிடுவதால் மலாய் வாக்குகள் ஐந்து அல்லது ஆறு முனைகளில் சிதறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
காப்பார் பி.கே.ஆர் தொகுதியும் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதே போல் ஜ.செ.க, அமனா, மூடா கட்சிகளும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் வெற்றிக்காக களத்தில் குதித்துள்ளனர் என்பதை சிலாங்கூர் இன்று கொண்ட கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
செய்தி - சுப்பையா சுப்ரமணியம்








