அம்பாங், நவ 5- மக்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்த தலைவர்களை நிராகரிக்கும்படி அம்பாங் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் ரோட்சியா வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நம்பிக்கை வைத்து அளித்த அதிகாரத்தை புறக்கணித்த எந்த வேட்பாளரையும் வாக்காளர்கள் பொருட்படுத்தக் கூடாது என்று அவர் கூறினார்.
நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களை மக்கள் புறக்கணிப்பதற்கு இதுவே தக்க தருணமாகும். அவர்கள் யாராக இருந்தாலும் பாதகமில்லை. இரண்டு, மூன்று முறை தொகுதியை தங்கள் வசம் வைத்திருக்கலாம், ஏன், மந்திரியாக கூட இருக்கலாம்.ஆனால்,
அத்தகைய துரோகிகளுக்கு இனி இடமில்லை என்று அவர் சொன்னார்.
கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹராப்பான் சார்பில் அம்பாங் தொகுதியில் போட்டியிட்டு வென்று தற்போது பார்ட்டி பங்சா மலேசியா கட்சி சார்பாக இத்தேர்தலில் போட்டியிடும் டத்தோ ஜூரைடா கமாருடினை மறைமுகமாக குறிப்பிட்டு ரோட்சியா இவ்வாறு கூறியதாக கருதப்படுகிறது.
அம்பாங், டத்தோ அகமது ரசாலி மண்டபத்தில் நடைபெற்ற வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் இதனைத் தெரிவித்தார்.








