ஷா ஆலம், அக் 31- தொடக்கப் பள்ளி மாணவர்களை இலக்காக கொண்ட மந்திரி புசார் கட்டமைப்பின் (எம்.பி.ஐ.) “மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்“ உதவித் திட்டத்திற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
தகுதி உள்ள மாணவர்களுக்கு தலா 100 வெள்ளி உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதியிலும் 300 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக எம்.பி.ஐ. நிறுவன கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனா நோர் கூறினார்.
தாங்கள் சார்ந்துள்ள தொகுதி அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பத்தை வரும் நவம்பர் இறுதி வரை செய்யலாம் என்றும் நிதியை பகிர்ந்தளிக்கும் பணி டிசம்பர் மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.
சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம், யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் திட்டம் அல்லது சிலாங்கூர் ஸக்கத் அறவாரியம் ஆகியவற்றின் மூலம் உதவி பெறாதவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கவுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கு மாதச் சம்பளம் 2,500 வெள்ளிக்கும் குறைவாக இருக்க வேண்டும் என முன்பு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த சம்பள வரம்பு 4,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் அவர்.







