கோலாலம்பூர், அக் 10- அண்டை வீட்டுக்காரருக்கு மரணம் ஏற்படும் அளவுக்கு அவரை கவசத் தொப்பியால் தாக்கிய சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள டாமன்சாரா மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்தது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் அந்த சந்தேகப்பேர்வழியை விடியற்காலை கோத்தா டாமன்சாரா பகுதியில் கைது செய்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.
தாக்குதலுக்குள்ளான 45 வயது ஆடவர் முழு நேரே ரேலா உறுப்பினர் என்றும் சம்பவ இடத்திலேயே அவர் உயிழந்ததாகவும் அவர் சொன்னார்..
இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னர் குடிபோதையில் தம்முடன் லிப்டில் ஏறிய அந்த இளைஞரை ரேலா உறுப்பினர் கடிந்து கொண்டுள்ளார். லிப்டை விட்டு வெளியேறியதும் அவ்வாடவர் தனது சகாவுடன் சேர்ந்து அந்த ரேலா உறுப்பினரை அவரின் வீட்டு வாசல்வரை துரத்தியுள்ளார்.
அங்கே, கவசத் தொப்பி மற்றும் கட்டையைக் கொண்டு ரேலா உறுப்பினர் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார் என்பதை தொடக்கக கட்ட விசாரணை காட்டுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கவசத் தொப்பி, கட்டை மற்றும் தீப்பெட்டி ஆகியவற்றை சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றினர் என அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.
இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவ்வாடவரை விசாரணைக்காக தாங்கள் தடுத்து வைத்துள்ளதாகவும் இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு ஆடவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








