கிள்ளான், அக் 10- ஐ-சீட் எனப்படும் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா வாயிலாக முதன் முறையாக இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய தொழில்முனைவோர் வர்த்தக பெருவிழா சுமார் 100 சிறுதொழில் வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்குரிய தளமாக அமைந்தது.
அதோடு மட்டுமின்றி தங்கள் வர்த்தகத்தை மேலும் பெரிய அளவில் விரிவுபடுத்துவதற்குரிய வாய்ப்பினையும் அதன் பங்கேற்பாளர்களுக்கு இந்த மூன்று நாள் விற்பனை விழா ஏற்படுத்தி தந்துள்ளதாக சமூக பொருளாதார மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
மேலும், இந்த நிகழ்வின் வாயிலாக இந்திய சமூகத்திற்கு மாநில அரசு ஏற்படுத்தி தந்துள்ள திட்டங்கள் தொடர்பான தகவல்களை அரசு நிறுவனங்கள் சமூகத்திடம் கொண்டுச் சென்று சேர்ப்பதற்குரிய வாய்ப்பும் கிட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த வர்த்தகத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் வர்த்தக நுணுக்கங்களை வளர்த்துக் கொள்வதற்கும் அடுத்தக் கட்டம் நோக்கி நகர்வதற்கும் வாய்ப்பு கிட்டும் என்று அவர் விற்பனை விழாவின் நிறைவு விழாவில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.
இங்குள்ள டத்தாரா செட்டியில் நடைபெற்ற மூன்று நாள் விற்பனை பெருவிழாவை மந்திரி புபுசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று நிறைவு செய்து வைத்தார்.
இந்திய தொழில்முனைவோருக்கு அவர்களுக்கும் தேவையான வர்த்தக உபகரணங்களை வழங்கும் நோக்கிலான இந்த ஐ.-சீட் திட்டம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது.



