குவாந்தான், ஜூலை 11- இலங்கையில் பதட்டமான சூழல் நிலவினாலும் அந்நாட்டிலுள்ள மலேசிய தூதரகத்தில் பதிந்து கொண்டுள்ள 85 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா கூறினார்.
அந்நாட்டின் நடப்பு நிலவரத்தை தாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருவதாகவும் நிலைமை மேலும் மோசமடைந்தால் அங்குள்ள மலேசியர்களை இடமாற்றம் செய்வதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
அந்நாட்டு அதிபரும் பிரதமரும் தங்கள் அதிகாரத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைத்து விட்ட காரணத்தால் இன்னும் ஓரிரு நாட்களில் அங்கு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேற வேண்டாம் என அந்நாட்டிலுள்ள மலேசியர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஏதேனும் உதவி குறிப்பாக உணவும் தேவைப்படும் பட்சத்தில் தூதரகத் தரப்பினரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம் என்றார் அவர்.
இன்று இங்கு நடைபெற்ற இண்ட்ரா மக்கோத்தா தொகுதி நிலையிலான ஹாஜ்ஜுப் பெருநாள் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாதவர்கள் உடனடியாக அந்நாட்டிலுள்ள மலேசியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளும்படியும் அவர் ஆலோசனை கூறினார்.
இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. சுமார் 5,100 கோடி அமெரிக்க டாலர் ( 22,600 கோடி மலேசிய ரிங்கிட்) கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலையில் ஐ.எம்.எப். எனப்படும் அனைத்துலக நிதியகத்தின் உதவியை அந்நாடு நாடியுள்ளது.








