சிப்பாங், ஏப்ரல் 16: நேற்று ஜாலான் சிப்பாங்-சாலாக்கில் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, நிரந்தரக் குடியுரிமை பெற்ற ஒருவர் உட்பட மூன்று இந்தோனேசிய ஆண்கள், இன்று அதிகாலை ஷா ஆலம் பாடாங் ஜாவாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் கைது செய்யப்பட்ட 24 முதல் 50 வயதுக்குட்பட்ட அனைத்து நபர்களும் கொலை வழக்கில் தொடர்பு இல்லை என்று அவர்கள் மறுத்துள்ளதாகச் சிப்பாங் காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.
வான் கமருல் அஸ்ரான் கூற்றுப்படி போலிஸ் உளவுத்துறை தகவல் மூலம், பாதிக்கப்பட்ட வங்காளதேசிக்கு 25 வயதுடைய ஒரு காதலி இருந்தாள், மூன்று குழந்தைகளுக்குத் தாயான அவரின் கணவர் ஒரு இந்தோனேசியர் என்றும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபி) போது, பெண்ணின் கணவர் இந்தோனேசியாவுக்குச் சென்று ஆகஸ்ட் 2021 இல் மலேசியாவுக்குத் திரும்பினார் எனத் தெரிகிறது..
அவரது மனைவி பாதிக்கப்பட்டவருடன் நட்பாக இருப்பதைக் கண்டுபிடித்த பின், கோபமடைந்து கணவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார்.
நேற்று, ஜாலான் சிப்பாங்-சலாக் பகுதியில், வயிற்றில் காயங்களுடன், கைகள் கேபிள் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆணின் சடலத்துக்கு, பொறாமை மற்றும் பழிவாங்கும் நோக்கத்தால் தூண்டப்பட்ட கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது என்று வான் கமருல் அஸ்ரான் கூறினார்.








