கோலாலம்பூர், ஜன 11- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 2,641 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 2,888 ஆக இருந்தது.
இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோய்க்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 88 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று நண்பகல் 12.00 மணி வரை 2,808 பேர் இந்நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இது வரை இந்த நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 17 ஆயிரத்து 422 ஆக உயர்வு கண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 57 பேர் அல்லது 2.2 விழுக்காட்டினர் கடுமையான தாக்கம் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் எஞ்சிய 2,584 பேர் அல்லது 97.8 விழுக்காட்டினர் லேசான அல்லது அறிகுறி அறவே இல்லாத ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட பாதிப்பையும் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 நோயாளிகளில் 253 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 106 பேருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது என்று நோய்த் தொற்று தொடர்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நேற்று மாலை 3.00 மணி வரை ஒரு கோவிட்-19 சம்பவம் அடையாளம் காணப்பட்டதாக கூறிய அவர், இதன் வழி வெள்ள அகதிகள் மத்தியில் இந்த நோய்த் தொற்று எண்ணிக்கை 470 ஆக உயர்ந்துள்ளது என்றார்.








