கோலாலம்பூர், ஜூலை 21- பத்து கேவ்ஸ், தாமான் செலாயாங் உத்தாமாவிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற ஹாஜ்ஜூப் பெருநாள் விருந்தில் கலந்து கொண்ட 30 அந்நிய நாட்டினர் மற்றும் ஒரு உள்நாட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அந்த வீட்டில் விருந்து நடைபெறுவது தொடர்பில் காலை 10.00 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 20 முதல் 40 வயது வரையிலான அவர்கள் அனைவரையும் கைது செய்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜைனால் முகமது முகமது கூறினார்.
இந்நடவடிக்கையில் 29 ஆண்கள் மற்றும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 30 பேர் வெளிநாட்டினர் ஆவர். பிடிபட்டவர்களில் நால்வர் செல்லத்தக்க பயண ஆவணங்களைக் கொண்டிருந்தனர். மேலும் அறுவர் காலாவதியான வேலை அனுமதியை வைத்திருந்தனர். எஞ்சியோரிடம் எந்த ஆவணமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
கூடல் இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறியது உள்பட எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியது, செல்லத்தக்க ஆணவங்களைக் கொண்டிராதது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
மேல் விசாரணைக்காக தடுத்து வைப்பதற்காக கைது செய்யப்பட்ட அனைவரும் நாளை செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் அவர் கூறினார்.



